ஆடி முதல் தை வரை: சுவாசத்திலிருந்து ஆன்மா வரை

தமிழ் மாதங்கள் சந்திரன் பாதையை வைத்து அமைக்கப்பட்டவை; மேலும் சந்திரன் முழு நிலவாக இருக்கும் நட்சத்திரத்தை வைத்தே தமிழ் மாதத்தின் பெயரும் அமைந்திருக்கும். இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு சுழறும் ஓட்டத்தில் சூரியனின் ஓட்டம் உத்தராயணம், அதாவது தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய பயணம், தட்சிணாயணம், அதாவது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணம் என பிரிக்கப்பட்டு, அவ் அயனங்களின் நிலைகளுக்கும் சந்திரனின் நிலைக்கும் பொருந்துமாறு நமது பண்டிகைகள், கலாச்சாரங்கள் வெகு நுணுக்கமாக அமைக்கப்பட்டன. காலப்போக்கில் அதன் ஆழ்ந்த அர்த்தம் தெரியாமல் போகவே இவை அனைத்தும் வெறும் சடங்குகளாக மட்டுமே நடத்தப்படுகின்றன.

இதில் ஆடி மாதம் தொடங்கி தை வரை இருக்கும் பாதை மிகவும் உன்னதமானது; ஆன்மீக நோக்கம் உள்ள ஒவ்வொரு சாதகருக்கும் இது அற்புதமான ஓர் புரிதல் பயணம். இதற்குப் பல்வேறு பரிமாணங்கள் இருந்தாலும், அவற்றில் சிலவற்றை இங்கு சற்று குருவின் அருள் கொண்டு ஆராய்ந்து பார்ப்போம்.


அடிப்படையில் சந்திரன் (மனம்) பிரதிபலிக்கும் தன்மை கொண்டது; உதாரணமாக அதற்குத் தனித்து ஒளி விடும் தன்மை கிடையாது. சூரியனின்  (அறிவு) இருந்து ஒளியை வாங்கி தருகிறது.

அதுபோலவே சந்திரன் தனது பயணத்தில், தானே முழுமை பெறும் நாளின் நட்சத்திரத்தின் தன்மையை அதன் அதிபதி (அந்த நட்சத்திரத்துடன் தொடர்புடைய கிரகம்) மூலமாக வெளிப்படுத்தும். இதை நமது பிண்ட லட்சணத்தில் பொருத்தும் போது, அண்டத்தின் தன்மை நமது உடலிலும் பிரதிபலிக்கிறது. இதை உணர்த்த ஞானிகள் அந்த நிலையை பயன்படுத்தி இவ்வ் ஜீவ நிலையில் இருந்து இறை உண்மை நிலைக்கு உயர்வதற்காக வழி அமைத்துள்ளனர்.

உதாரணமாக இங்கு பின்வரும் தட்சிணாயன மாதங்களும் அவற்றின் உள் விளக்கங்களும் பார்ப்போம்.

ஆடி – சுவாசம் (பிராணன்)

"ஆடி காற்றில் அம்மியும் நகரும்" – இது பழமொழியாக இருந்தாலும், இதன் நுணுக்கம் ஆடி மாதம் நமது உள்பயணத்தில் ஒரு முக்கியத் தொடக்கம் என்பதையே உணர்த்துகிறது. இது நமது பிண்டத்தில் சுவாசத்துடன் தொடர்புடையது.

ஆடி பூரம் : பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். கலை(சுவாசம் ), காந்தம் போன்ற நுண்ணுணர்வுகளை எழுப்பும் இந்த நாளில், நமது மனம் சுவாசத்துடன் இணையும் போது உயர்ந்த நிலையை அடையத் தகுந்த வாய்ப்பு கிடைக்கிறது.

ஆவணி – கேட்டல் (ஸ்ரவணம்)

சுவாசம் நிலைபெற்ற பின் மனம் அமைதியடைகிறது. அமைதியான மனம் கேட்கத் தொடங்குகிறது. இது வெறும் காதால் கேட்பது அல்ல; குருவின் உபதேசத்தையும், இயற்கையின் மொழியையும், உள்ளத்தின் குரலையும் கேட்பதாகும்.

புரட்டாசி – பாடல் (கீர்த்தனம்)

கேட்ட ஞானம் உள்ளத்தில் பதிந்தால் அது பாடலாக வெளிப்படுகிறது. பக்திப் பாடல் என்பது இசை மட்டுமல்ல; இறைநாமத்தை உயிரோடு இணைப்பது. அதனால் புரட்டாசி மாதம் பக்திக்கும், நாமசங்கீர்த்தனத்திற்கும் சிறப்புடையது.

ஐப்பசி – உணர்வு மற்றும் சமநிலை

பாடலால் மனம் உருகிய பின் உள்ளத்தில் உணர்வு பிறக்கிறது. அந்த உணர்வு அனைத்து உயிர்களையும் ஒன்றாகக் காணச் செய்கிறது. இதுவே சமநிலை (சமத்வம்). இன்பம்–துன்பம், வெற்றி–தோல்வி அனைத்தையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது.

கார்த்திகை – பார்த்தல் (தரிசனம்)

சமநிலை பெற்ற மனம் உலகை புதிய பார்வையில் பார்க்கத் தொடங்குகிறது. ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு நிகழ்விலும் தெய்வீகத்தை தரிசிக்கிறது. கார்த்திகை தீபம் இந்த உள் ஒளியை நினைவூட்டுகிறது.

மார்கழி – மனம் (தியானம்)

வெளிப்பார்வை அகப்பார்வையாக மாறும் காலம் மார்கழி. மனம் அலைபாயாமல் ஒருமுகப்படும்போது தியானம் மலர்கிறது. அதனால் மார்கழி மாதம் தியானம், திருப்பாவை, திருவெம்பாவை, இறைசிந்தனை ஆகியவற்றின் மாதமாக விளங்குகிறது.

தை – ஆன்மா (ஆத்ம ஞானம்)

மனம் முழுமையாக அமைதியடைந்த பின் மனிதன் தனது ஆன்மாவை உணர்கிறான். இதுவே தையின் புதிய பிறப்பு. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பதன் ஆழ்ந்த பொருள், வெளி வாழ்க்கையில் மட்டும் அல்ல; அகத்தில் ஆன்ம ஞானத்திற்கான வழி திறக்கப்படுவதுமாகும்.

சிந்திப்போம்......! தொடர்வோம் ....!

Comments