திருவைந்தெழுத்து உண்மை
ஒருநாள் திருவைந்தெழுத்து உண்மை புலப்பட விளங்கும்படி தொழுவூர் முதலியார்
வலியுறுத்த வள்ளலார் அருளிச்செய்த பாசுரம்
வலியுறுத்த வள்ளலார் அருளிச்செய்த பாசுரம்
ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்
ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ
ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து.
இதன் பொருள் :
ஆவி ஈரைந்தை - உயி்ர்க்குரிய ய என்னும் எழுத்தை; அபரத்தே வைத்து ஓதில் - மேலுள்ள சிவ என்ற எழுத்துக்கட்கு பின்னாக வைத்துச் சிவய என ஓதுவோமாயின்;
ஆ ஈரைந்து - ஆபத்தையும்;
வி ஈரைந்து விபத்தையும்;
அகற்றலாம்-போக்கிக் கொள்ளலாம்;
ஆவிஈர் ஐந்து அறலாம் - ஆன்மா பிறவிக் கடற்கு இழுக்கும் மலங்கள் ஐந்தின் தொடர்பும் அறுத்துக் கொள்ளலாம்;
ஆவி ஈரைந்து உறலாம் - ஆன்மா பத்தினை எய்துமாம்;
இரண்டோடு ஆய்ந்து - முத்தி நெறி இரண்டையும் ஆராய்ந்து;
ஆவி ஈரைந்திடலாம் - ஆன்மா தொண்டு வகை பத்தையும் இனிது செய்யலாம்;
ஓர் - இதனை உணர்ந்து கொள்க.
ஆவி - உயிர்; ஆன்மா என்றும் வழங்குவர். தமிழ் எண்களில் பத்து, ய என்ற எழுத்தாகும். திருவைந்தெழுத்துள் ய என்பது ஆன்மாவைக் குறிக்கும். திருவைந் தெழுத்து, சி, வ, ய, ந, ம என்பன. சி வ ய ந ம என்னும் போது சிவ என்பதன் பின் ய வருதலால், “அபரத்தே வைத்தோதில்” என்று கூறுகின்றார். பரம் - மேல்; இடம் நோக்கி, முன்னென்றும் மொழிவர். ஆவி ஈரைந்து, ஆ ஈரைந்து, வி ஈரைந்து எனப் பிரிந்து, ஆபத்து, விபத்து என வருவது காண்க. “சிவாயநம வென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை” என்று உரைப்பர் சான்றோர். அதனால் “ஆவி ஈரைந்தை அகற்றலாம்” எனக் கூறுகின்றார். ஆபத்து - தன்னாலும் பிற வுயிர்களாலும் உண்டாகும் இன்னல்; விபத்து - தெய்வத்தால் வருவன. ஐந்தறலாம் என்னுமிடத்து, ஐந்து உயிரைப் பிணிக்கும் மலம் ஐந்து; அவை, மூலமலம், திரோதான மலம், மாயா மலம், கன்ம மலம், மாமாயை என்பர். “மோக மிக வுயிர்கள் தொறும் உடனாய் நிற்கும் மூல வாணவ மொன்று, முயங்கி நின்று, பாக மிக வுதவு திரோதாயி யொன்று, பகர் மாயை ஒன்று, படர் கன்மமொன்று, தேக முறு கரணமொடு புவன போகச் செயலாகும் மாமாயைத் திரட்சி யொன்று, என்று ஆக மலம் ஐந்தென்பர்” (சிலப். 32) எனப் பெரியோர் கூறுகின்றனர். ஈரைந் துறலாவது, பத்து எய்துவது; பத்து - பத்தி. பக்தியைப் பத் தென்பது முண்டு. “பத்துடையீர் ஈசன் பழவடியீர்” (திருவெம்) எனவும், “பத்துடை யடியவர்க் கெளியவன்” (திருவாய். 1.3.1) எனவும் வருதல் காண்க. இரண்டு - பதமுத்தி பரமுத்தி என்பன. தொண்டு வகை பத்து. வல்வினையும் மெல்லினையுமாகத் தொண்டர் செய்த செயல் வகை. “பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே” (விடம் தீர்த்த) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.
இதனால் திருவைந் தெழுத்தை ஓது முறையும் அதனால் விளையும் பயனும் தெரிவித்தவாறாம்.
- மஹாசிவராத்திரி சிந்தனைக்காக ..
Comments