தருணமிது என்றுறிவித்து எனையாண்ட அப்பனவன்
காட்சி பொருள்காண்பித்து காண்பரிய பேரொளியாம்
அன்பர்உள்ளம் தான்அளித்து அன்புஉருகும் தொண்டுசெய்ய
செம்மையாக்கும் அய்யன்அவன் என்சொல்வேன் அச்சோவே ! 1
எட்டு இரண்டு அறியாத அடியேனை ஆட்கொண்டு
பத்தின் வகை தான் உணர்த்தி அன்புருவாய் ஏறும் வண்ணம்
அசபை என்னும் மொழிதந்து மோன மொழி பேசும் விதம்
அன்புஉருகும் அருள் தந்தான் என்சொல்வேன் அச்சோவே ! 2
தாள் தூக்கி மறுதாள் ஊன்றி தான்ஆடும் விதம் காட்டி
சோமமல்ல வாமமல்ல என்று உணர்த்தி நடுவாக்கி
கையறவு போக்கும் வண்ணம் தான் வந்து உள்நின்று
எந்தை அவன் பாதம் தந்தான் என்சொல்வேன் அச்சோவே ! 3
வான்வந்து தாள்தந்து காலம் அறும் வாசி கொண்டு
வாங் கென்றும் சிங் கென்றும் வகையாக ஊதும் வண்ணம்
வாளையுடன் விளையாடி வாய்நிரைய அமுதம் உண்ணும்
அங்கென்றே அவன் தந்தான் என்சொல்வேன் அச்சோவே ! 4
துதிக்கை கொண்டு மேல் ஏற்றி இன்பமுறும் வகைதந்து
துதிசெய்து கதிஏற்றும் அற்புதமாம் ஜோதி அவன்
அழுதழுது யான் பெற்ற அமுதூறும் அன்பன் அவன்
துன்பம் அற ஒளி தந்தான் என்சொல்வேன் அச்சோவே ! 5
ஒலி தன்னை ஒளியாக்கும் ஒம்கர பொருள் தந்து
ஒன்றரிய உணர்வாகி ஒடுங்கும் வகை ஊறும் வண்ணம்
உணர்வுடனே தான் வளைந்து உள் சென்று ஒளியாக்கும்
அங்குசமாம் கருவி தந்தான் என்சொல்வேன் அச்சோவே ! 6
Comments