அருளாலே சிவமாகி வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி நின்றான் அவன்
ஒலியாகி ஒளியாகி சுயம் ஆனவன்
வெளியாகி விண்ணாகி பரம் ஆனவன்
ஊனாகி உயிராகி உணர்வானவன்
அன்பாகி அருளாகி எமை வென்றவன் !
அருளாலே சிவமாகி வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி நின்றான் அவன் !! 1
காற்றாகி கனலாகி விரிந்தான் அவன்
புனலாகி அருளாலே புவியானவன்
கடல்ஆகி மழையாகி பொழிந்தான் அவன்
மரமாகி பழமாகி கணிந்தான் அவன் !
அருளாலே சிவமாகி வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி நின்றான் அவன் !! 2
மண்னோர்க்கும் விண்னோர்க்கும் பொதுவானவன்
எல்லோருக்கும் எளியோர்க்கும் அன்பானவன்
மேலென்றும் கீழ் என்றும் இல்லாதவன்
அன்பர்க்கு அருள் தந்து மகிழ்கின்றவன் !
அருளாலே சிவமாகி வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி நின்றான் அவன் !! 3
எட்டிற்கும் இரண்டிற்கும் எட்டாதவன்
வாக்கிற்கும் மனத்திற்கும் மறைவானவன்
சொல்லிற்கும் பதத்திற்கும் அப்பால் அவன்
ஓம்மெனும் ப்ரணவத்தில் உதிக்கின்றவன் !
அருளாலே சிவமாகி வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி நின்றான் அவன்!! 4
பிறப்பிற்கும் இறப்பிற்கும் மருந்தானவன்
இரவென்றும் பகல்என்றும் இல்லாதவன்
நடுவாகி நடமாடி அருள்கின்றவன்
உள்நின்று உணர்வோர்க்கு தெரிகின்றவன் !
அருளாலே சிவமாகி வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி நின்றான் அவன் !! 5
வங்கென்றும் சிங்கென்றும் வாசிப்பவன்
அன்புடனே அருள்தந்து நேசிப்பவன்
சித்தத்தை சிவமாக்க கற்பிப்பவன்
சிவ என்னும் புரி தன்னில் அருள்புரிகின்றவன்!
அருளாலே சிவமாக்க வந்தான் அவன்
வெளியாகி ஒளியாகி அருள்கின்றவன் !! 6
Comments