அன்பு வாசகர்களுக்கான பதிவு

அன்பு வாசகர்களுக்கான பதிவு 

அண்மையில் எமக்கு  வாசக அன்பர் அனுப்பிய மடலில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் "மிகுந்த தமிழ் அறிவு உடையவராக தாங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். நீங்கள் தரும் தகவல்கள் வித்தியாசமான வகையில் உள்ளது. சிந்தனையையும் தூண்டும் விதமாக உள்ளது மிகவும் சிறப்பு. நல்ல ஆன்மீக கருத்துக்களை தருகிறீர்கள். நன்றிகள் பல.

அன்பு வாசகர்களுக்கு , 
தங்கள் அன்பிற்கு நன்றிகள் பல , அடியேன் தமிழின் மீது மிகுந்த பற்று உடையவன் அதே நேரம் மிகுந்த தமிழ் அறிவோ ஆழமோ எமக்கு இருப்பதாக தெரியவில்லை. இங்கே பதிவிடும் கருத்துக்கள் அனைத்தும் எமது ஆழ்ந்த ஆத்மவிசாரத்தின்  வெளிப்பாடு மற்றும் எம் குருநாதர் இட்ட பிச்சை*. 
தமிழ் மிகப்பெரும் பொக்கிஷம் இதை ஒரு மொழியாக பார்த்து நாம் இதை விலக்கிவிட முடியாது. பல்வேறு மொழிகளில் புலமை இருந்து எம் ஞான குருநாதர் வள்ளலார் ஒருபோது மற்ற மொழிகளை தன் கையில் எடுக்கவில்லை. 
மேலும் அனைத்தும் கற்றுணந்த வள்ளல் தம் தமிழ் புலமையை பற்றி "அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்"  குறிப்பிடுகையில் " யாம் யார்? எமக்கு யாது தெரியும்? புழுவினுங் கடைய புலையரிற் சிறியேம் இதனால் நாணுதலுடையேம்"  என்று குறிப்பிடுகின்றார் எனில் எம்முடைய அறிவு எம்மாத்திரம் ?
ஆகவே எம்மால் ஒருபோதும் தமிழின் புலமையும் அதன் அறிவையும் பெரும் தன்மை இச் சிறியேனுக்கு வாய்ப்பது அரிது, அதேசமயம் அடியேன் தமிழை ஒரு ஞான அனுபவ வெளிப்பாடாக காண்கின்றேன். அதை ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க இது ஒரு தித்திக்கும் தேனாகவும் நம் ஆன்மாவை பிரகாசிக்க செய்யும் அனுபவமாகவும் இருப்பதை உணர்கின்றேன். 

மொழியியல் அடிப்படையில் அணைத்து பண்புகளையும் கொண்ட தமிழ் அந்த மொழியியலையும் தண்டி ஆன்மாக்களை உய்விக்கும் பண்பு கொண்டதாக இருக்கின்றது. இது தொடர்பாக உள்ள சில ஆய்வு கட்டுரைகள் இதை விரிவாக விளக்குகின்றன Towards the Alphabetic Structural Grammar of Tamil Language

 இதை திருமந்திரம் (தமிழ் அனைத்தும் தத்துவம் என உரைக்கின்றது )
தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகந் திரிவார்
அவிழு மனமும்எம் ஆதி யறிவுந்
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. - திருமந்திரம்

என குறிப்பிடுகின்றது, நாம் தமிழில் பலவற்றை இழந்து நிற்கின்றோம் என்பது தான் வருத்தமான உண்மை. 

இப்பதிவுகளின் தமிழ் தேற்றங்கள் அனைத்தும் முழுமை பெற்றவை என்று எம்மால் கூறமுடியாது ஆனால் இவை நிச்சயம் நம் ஆன்மவிசாரத்தை தூண்டும் என்பதில் ஐயமில்லை. மற்றும் முன்பு கூறியது போல இவை எம் குருநாதரின் கருணை என்பதால் இவற்றை படிக்கும் போது நமக்கு ஐயமோ இடையூறோ ஏற்படின் நாம் நம் குருநாதரின் துணை கொண்டு இவற்றை பார்த்து தெளிதல் வேண்டும்.
ஆகவே இது தமிழின் வகையில் இலக்கண, மொழி  அல்லது புலமையினையோ வெளிப்படுத்தும் நோக்கமோ முயற்சியோ அல்ல , இது ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் சேர்க்கும் ஒரு பயணம் அல்லது அப்பயணத்தில் கிடைக்கும் அனுபவ வெளிப்பாடு  ,மேலும் இந்த பதிவுகளில் உள்ள இலக்கண, மொழி ,சொல், பொருள் குற்றங்கள் எமது சிறுமையையும் அறியாமையும் உணர்த்தும். இதில் உள்ள ஞான செறிவும் விளக்கங்களும் எமது குருநாதன் கருணையும் பெருமையையும் உணர்த்தும்.எனக்கூறி வணங்குகின்றேன்.

அடியேனின் தமிழின் சிற்றறிவு இந்த பதிவில் புலம்பியுள்ளேன் , இந்த பித்தனின் புலம்பலையும் செவிமடுத்து , மழலை என்று ஏற்றுக்கொள்ளும் எம் பதியின் பெருங்கருணை எவ்வளவு சொன்னாலும் முடிவில்லா முயற்சி. அவன் கருணையை நினைந்து நினைந்து கண்ணீர் மல்குவதை விட வேறு என்ன செய்ய ?

*பிச்சை - "ப்ச்" என்ற சொல்லை வள்ளலார் பயன்படுத்தியதாக குறிப்பு , இதன் அருமை பற்றி தனி பதிவு தேவை என நினைக்கின்றேன்.

Comments